என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "முதலமைச்சர் நாராயணசாமி"
புதுச்சேரி:
கோவா மாநிலம் மற்றும் புதுவை உள்ளிட்ட யூனியன் பிரதேசங்களுக்கான மின் கட்டணத்தை நிர்ணயம் செய்ய மத்திய இணை ஒழுங்குமுறை மின்சார ஆணையம் என்ற அமைப்பு உள்ளது.
இந்த ஆணையத்திடம் ஆண்டு தோறும் யூனியன் பிரதேச அரசுகள் புதிய நிதி ஆண்டுக்கான மின்சார வினியோகம் தொடர்பாக வரவு - செலவு கணக்குகளை தாக்கல் செய்யும்.
இதன் அடிப்படையில் மின் கட்டணத்தை உயர்த்தவும் அனுமதி கோரப்படும். கடந்த ஜனவரி மாதம் புதுவையில் மின் கட்டணத்தை உயர்த்துவது தொடர்பாக கலந்தாய்வு கூட்டம் நடந்தது.
இந்த கூட்டத்தில் மின் கட்டணம் தற்போதைய நிலையிலேயே நீடிக்கும் என முடிவு செய்யப்பட்டது. இதனால் புதுவையில் மின் கட்டணம் உயரவில்லை.
இந்த நிலையில் புதுவையில் மின் கட்டணம் திடீரென உயர்த்தப்பட்டுள்ளது. தேர்தல் முடிந்த கையோடு கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு வருகிற 1-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது.
இணை மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தின் பரிந்துரைப்படி 4.59 சதவீதம் வரை மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
அதே போல் தற்காலிகமான துணை கூடுதல் கட்டணம் 4 சதவீதம் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எலக்ட்ரிக் வாகனங்களுக்கு சார்ஜ் செய்யும் நிலையங்களுக்கு மத்திய அரசு வரையறுத்துள்ள விதிகளின்படி சராசரியாக யூனிட்டுக்கு ரூ.5.68 வசூலிக்கப்பட உள்ளது.
வீட்டு உபயோக பயன் பாட்டுக்கு தற்போது ரூ.40 நிரந்தர கட்டணத்துடன் 100 யூனிட் வரை ஒரு யூனிட்டுக்கு ரூ.1.30 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இது, யூனிட்டுக்கு ரூ.1.50 ஆக உயர்த்தப்படுகிறது.
அதேபோல் 101 முதல் 200 யூனிட் வரை யூனிட்டுக்கு ரூ.2.25-ல் இருந்து ரூ.2.50 ஆகவும், 201 முதல் 300 யூனிட் வரை யூனிட்டுக்கு ரூ.3.95-ல் இருந்து ரூ.4.35 ஆகவும், 300 யூனிட்டுக்கு மேல் யூனிட்டுக்கு ரூ.5.10-ல் இருந்து ரூ.5.60 ஆகவும் உயர்கிறது.
வர்த்தக பயன்பாட்டுக்கு நிரந்தர கட்டணம் ரூ.120 சேர்த்து 100 யூனிட் வரை யூனிட்டுக்கு ரூ.5.15-ல் இருந்து ரூ.5.50 ஆகவும், 101 முதல் 250 யூனிட் வரை யூனிட்டுக்கு ரூ.6.15-ல் இருந்து ரூ.6.50 ஆகவும், 250 யூனிட்டுக்கு மேல் யூனிட்டுக்கு 6.85-ல் இருந்து ரூ.7.20 ஆகவும் அதிகரிக்கிறது.
குடிசை தொழில் பயன் பாட்டுக்கு ரூ.40 நிரந்தர கட்டணத்துடன் 100 யூனிட் வரை யூனிட்டுக்கு ரூ.1.30-ல் இருந்து ரூ.1.50 ஆகவும், 101 முதல் 200 யூனிட் வரை யூனிட்டுக்கு ரூ.2.25-ல் இருந்து ரூ.2.50 ஆகவும், 201 முதல் 300 யூனிட் வரை யூனிட்டுக்கு ரூ.3.95-ல் இருந்து ரூ.4.35 ஆகவும், 300 யூனிட்டுக்கு மேல் யூனிட்டுக்கு ரூ.5.10-ல் இருந்து ரூ.5.60 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
பாராளுமன்ற தேர்தலில் புதுவை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் மக்களின் அமோக ஆதரவால் சுமார் 2 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
ஆனால், தேர்தல் முடிவு அறிவித்த மறுநாளே மின் கட்டணத்தை உயர்த்தி இருக்கிறார்கள். இது, மக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
ஒழுங்குமுறை ஆணையம் சிபாரிசு செய்தும் அதை ஏற்க மறுத்த புதுவை அரசு தேர்தல் முடிந்ததும் அதை அமல்படுத்தியது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.
இது சம்பந்தமாக முதல்-அமைச்சர் நாராயணசாமியிடம் கேட்ட போது, புதுவையில் உயர்த்தப்பட்டுள்ள மின் கட்டணத்தை குறைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இது சம்பந்தமாக அதிகாரிகளுடன் கலந்து பேசி விட்டு கட்டண குறைப்பு முடிவை அறிவிப்போம் என்று கூறினார். எனவே, கட்டணம் குறைக்கப்படும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
புதுச்சேரி:
புதுவை சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவின் கீழ் உள்ள துறைகள் குறித்து ஆய்வுக்கூட்டம் சட்டசபையில் உள்ள கமிட்டி அறையில் இன்று நடந்தது.
கூட்டத்திற்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமை தாங்கினார். அமைச்சர் மல்லாடிகிருஷ்ணாராவ், தலைமை செயலாளர் அஸ்வினிகுமார், சுகாதாரம், சுற்றுலா, மீன்வளம் உள்ளிட்ட துறைகளின் செயலர்கள், இயக்குனர்கள், உயர் அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்றனர்.
கூட்டத்தில் தற்போதைய நிதிநிலை, துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் தற்போதைய திட்டங்களின் நிலை, திட்டங்களுக்கு தேவைப்படும் நிதி ஆகியவை குறித்து ஆய்வு நடந்தது. #Narayanasamy
புதுச்சேரி:
புதுவைக்கு மாநில அந்தஸ்து கேட்டு கம்பன் கலையரங்கில் நடந்த கருத்தரங்கில் முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-
நாட்டிலேயே டெல்லியும், புதுவையும்தான் சட்டசபை உள்ள யூனியன் பிரதேசங்களாகும். டெல்லியை விட புதுவைக்கு நிலம், நிர்வாகம், நிதி, சட்ட ஒழுங்கு என 4 அதிகாரங்கள் பிற மாநிலங்களைப்போல கொடுக்கப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் நமது உரிமைகளை வலியுறுத்தாததால் நமது ஆட்சியின் உரிமைகளை நமக்கு தெரியாமல் சிலர் திருத்தியுள்ளனர். இதை முறியடிக்க மாநில அந்தஸ்து தேவை.
டெல்லி முதல்-அமைச்சர் கெஜ்ரிவால் தொடர்ந்த வழக்கில் கவர்னருக்கு தனிப்பட்ட அதிகாரம் கிடையாது, அமைச்சரவையின் முடிவுக்கு கட்டுப்பட வேண்டும். அரசு எடுக்கும் முடிவுக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது என சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.
அரசியலமைப்பு பிரிவில் நீதிமன்றம் தீர்ப்பளித்ததால் இந்த தீர்ப்பு அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும். ஆனால் டெல்லிக்கு அளித்த தீர்ப்பு புதுவைக்கு பொருந்தாது என கவர்னர் கிரண்பேடி தொல்லை கொடுத்து வருகிறார். மாநில நிர்வாகத்தில் தலையிட்டு அதிகாரிகளை மிரட்டியும் வருகிறார்.
தலைவர்கள் போராடி புதுவைக்கு சுதந்திரம் பெற்றுத்தந்தது அடிமையாக இருக்க அல்ல. நமது மாநிலத்திற்கு பிரச்சினை என்றால் யார் இடையூறாக இருந்தாலும் அவர்களை எதிர்கொள்வோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
கருத்தரங்களில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்மாநில செயலாளர் முத்தரசன் பேசியதாவது:-
மாநில சட்டசபைகளை மத்திய பா.ஜனதா அரசு மதிக்கவில்லை. தமிழகத்திலும், புதுவையிலும் இரட்டை ஆட்சி நடக்கிறது. இதை எதிர்த்து போராடும் துணிவில்லாமல் தமிழக அரசு உள்ளது.
ஆனால் நாராயணசாமி தலைமையிலான அரசு எதிர்த்து போராடுகிறது. கவர்னரை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் திரும்பிச் செல்லமாட்டார்.
அவர் விலகிச்செல்ல 5 மாநில தேர்தலில் மணி அடிக்கப்பட்டுள்ளது. புதிய ஆண்டு பிரதமர் மோடிக்கு விடை கொடுக்கும் ஆண்டாக அமையும்.
இவ்வாறு அவர் பேசினார். #narayanasamy
புதுவை சட்டமன்றம் இன்று காலை 10 மணிக்கு கூடியது.
சபாநாயகர் வைத்திலிங்கம் குறள் வாசித்து சபை நிகழ்வுகளை தொடங்கி வைத்தார். சட்டமன்றத்தில் முதல் நிகழ்வாக மறைந்த தலைவர்களுக்கு இரங்கல் தீர்மானம் முன்மொழியப்பட்டது.
முதல்-அமைச்சர் நாராயணசாமி, மறைந்த தமிழக முதல்-அமைச்சர் கருணாநிதி, பாராளுமன்ற முன்னாள் சபாநாயகர் சோம்நாத்சாட்டர்ஜி, முன்னாள் பிரதமர் வாஜ்பாய், ஐ.நா. பொதுச்செயலாளர் கோபிஅன்னான், புதுவை முன்னாள் அமைச்சர் காசிலிங்கம் ஆகியோருக்கான இரங்கல் தீர்மானத்தை முன்மொழிந்தார்.
இரங்கல் தீர்மானத்தின் மீது தி.மு.க. உறுப்பினர் சிவா, சுயேச்சை உறுப்பினர் ராமச்சந்திரன், அ.தி.மு.க. உறுப்பினர் வையாபுரி மணிகண்டன், காங்கிரஸ் உறுப்பினர் பாலன், பா.ஜனதா உறுப்பினர் செல்வகணபதி, தி.மு.க. உறுப்பினர் கீதாஆனந்தன், பா.ஜனதா உறுப்பினர்கள் சங்கர், சாமிநாதன், அ.தி.மு.க. உறுப்பினர் அசனா, காங்கிரஸ் உறுப்பினர்கள் ஜெயமூர்த்தி, அனந்தராமன், அமைச்சர் நமச்சிவாயம், அ.தி.மு.க. உறுப்பினர் அன்பழகன், எதிர்க்கட்சித்தலைவர் ரங்கசாமி, முதல்-அமைச்சர் நாராயணசாமி ஆகியோர் பேசினர்.
இதைத்தொடர்ந்து சபாநாயகர் வைத்திலிங்கமும், இரங்கல் தீர்மானத்தின் மீது தனது கருத்துக்களை குறிப்பிட்டு பேசினார். இதைத்தொடர்ந்து சபை உறுப்பினர்கள் அனைவரும் 2 நிமிடம் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தும் படி சபாநாயகர் கேட்டுக் கொண்டார்.
இதையடுத்து உறுப்பினர்கள் அனைவரும் மவுனமாக எழுந்து நின்று 2 நிமிடம் மறைந்த தலைவர்களுக்காக மவுன அஞ்சலி செலுத்தினர். #PondicherryAssembly
புதுச்சேரி:
புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
ரோடியர், சுதேசி, பாரதி, கூட்டுறவு சர்க்கரை ஆலை, காரைக்கால் ஜெய பிரகாஷ் நாராயணன் ஆலை, பாப்ஸ்கோ, பாசிக் உள்ளிட்ட அரசு சார்பு நிறுவனங்கள், கூட்டுறவு நிறுவனங்களுக்கு அரசு சார்ந்த சம்பள மானியமாக நடப்பாண்டில் ரூ.326 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும் முதலீட்டு மானியம், நிர்வாக செலவுக்கு ஒட்டுமொத்தமாக ரூ.786 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
கடந்த என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியில் இந்த நிறுவனங்களில் தேவைக்கு அதிகமாக ஆட்களை நியமித்ததால் நஷ்டத்தை சந்தித்தது. இந்த நிறுவனங்களை தொடர்ந்து இயக்குவது தொடர்பாக ஐ.ஏ.எஸ் .அதிகாரி விஜயன் தலைமையில் ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது.
இந்த குழுவினர் பாப்ஸ்கோ, பாசிக், கூட்டுறவு நிறுவனங்களில் ஆய்வு செய்து அரசுக்கு ஒரு அறிக்கை சமர்பித்துள்ளனர். இந்த அறிக்கையில் அரசு சார்பு நிறுவனங்களை லாபகரமாக இயக்க பல்வேறு ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் அளித்துள்ளது.
இதை உடனடியாக நிறைவேற்ற முடியாது. படிப்படியாக நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்கும். மத்திய உள்துறை அமைச்சகம் கவர்னரின் நிதி அதிகாரங்களை தேர்ந்தெடுக்கப்பட்ட அரசோடு பகிர்ந்துகொள்ளும்படி உத்தரவிட்டது.
ஆனால், மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவை கவர்னர் மதிக்கவில்லை. தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்க அனுப்பிய கோப்புக்கு அனுமதியும் தரவில்லை.
அரசு சார்பு நிறுவனங்கள் அனைத்தும் லாபத்தோடு இயங்க முடியாது. பல நிறுவனங்கள் சேவை நிறுவனங்களாக இயங்குகிறது.
கதர் வாரியம், அரசு போக்குவரத்துக்கழகம், கூட்டுறவு நிறுவனங்கள் லாப நோக்கத்தை எண்ணாமல் மக்களுக்கான சேவை நிறுவனமாகவே செயல்பட்டு வருகிறது. கவர்னர் லாபத்தில் செயல்படும் நிறுவனங்களுக்கு மட்டும் நிதி அளிக்க வேண்டும் என சொல்கிறார்.
பிற அரசு சார்பு நிறுவனங்களுக்கு நிதி தர முட்டுக்கட்டையாக உள்ளார். விஜயன் கமிட்டி பரிந்துரையை அமல்படுத்த காலதாமதம் ஏற்படும்.
சம்பந்தப்பட்ட துறைகளை அழைத்து பேசிதான் முடிவெடுக்க வேண்டும். ஆனால், கவர்னர் உடனடியாக அதை அமல்படுத்த சொல்கிறார். அந்த அறிக்கையில் ஆட்குறைப்பு மட்டுமல்ல, நிர்வாக சீர்திருத்தம், சிக்கனம் ஆகியவற்றையும் பரிந்துரை செய்துள்ளார்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு பல கடமைகள் உள்ளது. எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள், முதல்-அமைச்சர் ஆகியோர் மக்களுக்கு பதில் சொல்லும் நிலையில் உள்ளனர். அரசு நிறுவனங்களில் பணியாற்றுபவர்களுக்கு பணி பாதுகாப்பும் உள்ளது.
இதையெல்லாம் கருத்தில் கொண்டே அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கும். கவர்னருக்கு இதில் எந்த பொறுப்பும் இல்லை. இதனால்தான் அவர் அரசு நிர்வாகத்தை முடக்க நினைக்கின்றார்.
அதிகாரம் தொடர்பாக காங்கிரஸ் எம்.எல்.ஏ லட்சுமிநாராயணன் தொடர்ந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் இறுதி கட்டத்தை அடைந்துள்ளது. இந்த தீர்ப்பை எதிர்பார்த்திருக்கிறோம். இதன்பிறகு கவர்னரின் அதிகார மீறலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.
புதுவை ஜிப்மரின் கிளை 50 ஏக்கரில் சேதராப்பட்டில் அமையவுள்ளது. இங்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை, உடனடி விபத்து மறுவாழ்வு சிகிச்சை, மறுவாழ்வு மையம், இதயநோய் சிகிச்சை, வான்வழி ஆம்புலன்ஸ் ஆகியவற்றை ஒருங்கிணைத்து ஜிப்மர் கிளை தொடங்கப்பட உள்ளது. இதற்கு ரூ.ஆயிரத்து 200 கோடி திட்ட மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கான அடிக்கல் நாட்டு விழா விரைவில் நடைபெறும். இதற்கான தகவலை மத்திய சுகாதாரத்துறை மந்திரி நட்டா தெரிவித்துள்ளார். புதுவையில் எம்பிபிஎஸ் படிப்பவர்கள் 10 ஆண்டுக்குள் படிப்பை முடிக்க வேண்டும் என்று கடந்த காலத்தில் இருந்தது.
தற்போது புதுவை பல்கலைக்கழகம் 8 ஆண்டாக குறைத்துள்ளது. 8 ஆண்டுக்கு பிறகும் படிப்பை முடிக்காமல் 50 மாணவர்கள் உள்ளனர்.
இவர்கள் என்னை சந்தித்து தங்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கும்படி கேட்டுக்கொண்டனர். இதன்பேரில் பல்கலைக்கழக துணைவேந்தரோடு பேசி கூடுதலாக ஒரு ஆண்டு தேர்வு எழுத அனுமதிக்க கோரியுள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார். #cmnarayanasamy #governorkiranbedi
புதுச்சேரி:
புதுவை அரசின் செய்தி மற்றும் விளம்பரத்துறை சார்பில் இந்திராகாந்தியின் நினைவுதினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது.
நினைவுதினத்தை யொட்டி விழுப்புரம் சாலையில் உள்ள அவர் சிலைக்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி மாலை அணிவித்தார்.
சபாநாயகர் வைத்திலிங்கம், அமைச்சர் நமச்சிவாயம், எம்.எல்.ஏ. விஜயவேணி, டெல்லி பிரதிநிதி ஜான்குமார், முன்னாள் அமைச்சர் பெத்தபெருமாள், முன்னாள் எம்.எல்.ஏ. நீலகங்காதரன், காங்கிரஸ் பொதுச்செயலாளர்கள் ஏ.கே.டி. ஆறுமுகம், தனுசு, கருணாநிதி, நிர்வாகிகள் சீனுவாசமூர்த்தி, கண்ணன், பாசிங்கம், இளையராஜா, இளைஞர் காங்கிரஸ் தலைவர் ரமேஷ், மாணவர் காங்கிரஸ் தலைவர் கல்யாண சுந்தரம், சபாநாயகரின் தனி உதவியாளர் வினோத், முன்னாள் இளைஞர் காங்கிரஸ் துணைத்தலைவர் சரவணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இதைத் தொடர்ந்து சர்வமத பிரார்த்தனை நடத்தப்பட்டது.
முன்னதாக காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் மாநில காங்கிரஸ் தலைவர் நமச்சி வாயம் தலைமையில் இந்திராகாந்தியின் நினைவுதினம் அனுஷ்டிக்கப்பட்டது. அங்கு அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த இந்திராகாந்தியின் உருவப்படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் காங்கிரஸ் நிர்வாகிகள் மத்தியில் நாராயணசாமி பேசியதாவது:-
நாட்டுக்காக உயிர் கொடுத்த தியாக தலைவி இந்திராகாந்தி. அவர் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தினார். அதேபோல ராகுல்காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சியை நாமும் வலுப்படுத்த வேண்டும். நாட்டுக்காக வேறு எந்த கட்சியினராவது ரத்தம் சிந்தியது உண்டா? ராகுல்காந்தி நாடு முழுவதும் பயணம் செய்து கட்சியை வலுப்படுத்தி வருகிறார். அவரின் கரத்தை நாமும் வலுப்படுத்த வேண்டும். காங்கிரசாரை பொறுத்தவரை கட்சி இரண்டாம்பட்சம்தான். நாடுதான் முக்கியம்.
இன்று மத்திய பா.ஜனதா ஆட்சியில் சிறுபான்மையினர், தாழ்த்தப்பட்டோருக்கு பாதுகாப்பற்ற நிலை உருவாகியுள்ளது. எதிர்கட்சி ஆளும் மாநிலங்களை மத்திய பா.ஜனதா அரசு திட்டமிட்டு பழி வாங்குகிறது. இதுதொடர்பாக சோனியா காந்தியிடம் தெரிவித்தேன். அப்போது பா.ஜனதாவின் சதியை முறியடிக்கும் பொறுப்பு உங்களுக்கு உள்ளது என்று சொன்னார்.
டெல்லியில் ராகுல் காந்தியை சந்தித்தபோது பா.ஜனதாவின் தவறான நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து தெருவில் இறங்கி போராடுங்கள் என கூறினார். ரபேல் விமான ஊழல், பெட்ரோல், டீசல் விலை உயர்வு, சி.பி.ஐ. இயக்குனர் மாற்றம் ஆகியவற்றுக்காக புதுவையில் பிரம்மாண்ட போரட்டத்தை நாம் நடத்தியுள்ளோம்.
இன்னும் 4 அல்லது 5 மாதங்கள்தான் உள்ளது. இடையில் 5 மாநில தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் காங்கிரசுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. நாட்டு மக்களுக்காக நாம் குரல் கொடுக்க வேண்டும். போராட வேண்டும்.
விலைவாசி உயர்வு, வேலையின்மை, பாதுகாப்பின்மை ஆகியவற்றால் நாட்டு மக்கள் பல்வேறு துன்பங்களுக்கு ஆளாகியுள்ளனர். ராகுல்காந்தி தலைமையில் நாட்டு மக்களை துன்பங்களில் இருந்து காப்பாற்ற ஒவ்வொரு காங்கிரசாரும் போராட வேண்டும். இன்று சர்தார் வல்லபாய் படேலின் பிறந்ததினம். இந்திரா காந்தியின் நினைவுதினத்தை முறியடிக்க பா.ஜனதா சர்தார் வல்லபாய் படேலை கையில் எடுத்துள்ளது.
ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை தடை செய்தவரே அவர் தான். பா.ஜனதா சந்தர்ப்பவாத அரசியல் நடத்துகிறது. பா.ஜனதாவுக்கு கொள்கையோ, கோட்பாடோ கிடையாது, நாற்காலிதான் வேண்டும். காங்கிரஸ் ஆட்சியில் நாடு முழுவதும் காங்கிரசாரை கவர்னராக நியமிப்பதாக பா.ஜனதா பொய் பிரச்சாரம் செய்தது. ஆனால் இன்று ஆர்.எஸ்.எஸ்.காரர்கள்தான் கவர்னர்களாக உள்ளனர். மத்திய அரசு நிர்வாகத்தையே ஆர்.எஸ்.எஸ்.தான் நடத்துகிறது. பா.ஜனதாவை நாட்டை விட்டே விரட்ட வேண்டும். அப்போதுதான் நாடு முன்னேறும்.
பிரதமர் நரேந்திர மோடி காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும் என்கிறார். அவர் அப்பாவோ, தாத்தாவோ வந்தாலும் இதை செய்ய முடியாது. காங்கிரஸ் கட்சியை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது.
காங்கிரஸ் ஒரு பீனிக்ஸ் பறவை. அது மீண்டும், மீண்டும் எழும். ராகுல்காந்தியை பிரதமராக்கும் தேர்தல் 2019(ல் வருகிறது. அதற்கு காங்கிரசார் இரவு, பகலாக ஒற்றுமையோடு பாடுபட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் திரளான காங்கிரசார் பங்கேற்றனர்.
புதுச்சேரி:
புதுவை மாநில பா.ஜனதா தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-
நாராயணசாமி தலைமையிலான அமைச்சரவை பதவியேற்றது முதல் நிதி நெருக்கடி என்ற காரணத்தை கடந்த 2½ ஆண்டாக கூறி வருகின்றனர். இதனால் ஏழைகளுக்கு வழங்க வேண்டிய இலவச அரிசியைக்கூட வழங்கவில்லை. அதுமட்டுமின்றி புதிதாக ஒரே ஒரு முதியோருக்குகூட பென்ஷன் வழங்கவில்லை.
சிக்கன நடவடிக்கை என்ற பெயரில் சபாநாயகர் சைக்கிளில் வருகிறார். 2½ ஆண்டில் 20 நாட்கள் தான் சட்டசபை நடந்துள்ளது. எப்போது சட்டசபைக்கு சென்றாலும் அமைச்சர்களின் அலுவலகங்கள் காலியாகவே உள்ளது.
இப்படியிருக்க 2 ஆண்டில் மட்டும் டீ, காபி, சிற்றுண்டி, டெலிபோன் ஆகியவற்றுக்கு அமைச்சர்கள் ரூ.3 கோடியே 15 லட்சம் செலவு செய்துள்ளனர். இதுதான் அமைச்சர்களின் சிக்கனமா? இதுவும் உண்மையான செலவுக்கான கணக்குகள் தானா? என்பதில் சந்தேகம் உள்ளது.
எம்.எல்.ஏ.க்களுக்கு அரசு சார்பில் ரூ.48 ஆயிரம் சம்பளம் வழங்கப்படுகிறது. அதில் ரூ.20 ஆயிரம் டீசலுக்காக கொடுக்கின்றனர். ஆனால் அமைச்சரும், எம்.எல்.ஏ.க்களும் டீசலுக்காக தனியாக செலவு செய்து பில் கொடுக்கின்றனர். தொழில்துறை அமைச்சர் பிப்டிக்கில் பென்சில், பேனா உள்ளிட்ட ஸ்டேஷனரி வாங்க ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் செலவு செய்துள்ளார். வளமான புதுவையை வறுமையான புதுவையாக மாற்றியுள்ளனர்.
சம்பளம் இல்லாமல் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு சம்பளம் வழங்க ரூ.2 கோடிதான் தேவைப்படும். ஆனால் அமைச்சர்கள் டீ செலவுக்கு ரூ.3 கோடி செலவு செய்துள்ளனர். நிதி நெருக்கடியை காரணம் காட்டி பல ஆண்டுக்கு முன் நிறுத்தப்பட்ட லாட்டரி சீட்டை மீண்டும் கொண்டுவர அமைச்சரவையில் முடிவெடுத்திருப்பதாக தெரிகிறது. இதை பா.ஜனதா சார்பில் கடுமையாக எதிர்க்கிறோம்.
லாட்டரியால் ஏழை, நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். இதை ஆய்வு செய்ய கவர்னரும் ஒப்புதல் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. லாட்டரி ஆரம்பிப்பது தொடர்பாக மக்களிடம் கவர்னர் கருத்து கேட்க வேண்டும். நிதி நெருக்கடி என பொய் யான காரணத்தை கூறி வருகின்றனர்.
தமிகத்தில் அரசே மணல் விற்பனை செய்யவுள்ளது. ஆனால் புதுவையில் மணல் விற்பனை உரிமையை தனியாருக்கு வழங்க முடிவு செய்துள்ளனர். இதனால் சிலருக்கு மட்டுமே லாபம் கிடைக்கும். தமிழகத்தை பின்பற்றி புதுவையிலும் அரசே மணல் விற்பனையை செய்ய வேண்டும்.
மணல் தட்டுப்பாடால் ஒரு லட்சத்திற்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்படுகின்றனர். நகர அமைப்பு குழுமம் ஏழை மக்களுக்கு ஒரு விதமாகவும், பணக்காரர்களுக்கு ஒரு விதமாகவும் விதிமுறைகளை வகுக்கிறது.
பாகூரில் விவசாய நிலத்தில் ஒரு மது பார் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜனதா சார்பில் மனு அளிக்கப்பட்டது. ஆனால் போலீஸ் பாதுகாப்புடன் விதி மீறி மது பார் நடந்து வருகிறது. இதை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதுவை நகர மற்றும் கிராமப்புற பகுதிகளில் ஹைமாஸ் விளக்குகள் எங்கும் எரியவில்லை. இது தொடர்பாக பொதுப்பணித் துறை அதிகாரிகளிடம் கேட்டால் நிதி இல்லை என்கின்றனர்.
முதல்-அமைச்சர், அமைச்சர்களின் செலவினம் தொடர்பாக ஆதாரத்தோடு பிரதமர், உள்துறை அமைச்சரிடம் புகார் செய்யவுள்ளோம். மத்திய அரசு இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது முன்னாள் எம்.எல்.ஏ. கிருஷ்ணமூர்த்தி, துணைத் தலைவர் ஏம்பலம் செல்வம், பொதுச்செயலாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.
புதுச்சேரி:
ரபேல் விமான ஊழலை மறைக்க சி.பி.ஐ.துறை அதிகாரிகளை சுய லாபத்திற்காக மத்திய பா.ஜனதா மாற்றி உள்ளதாக கூறி நாடு முழுவதும் காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
அதுபோல் புதுவை மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் தலைமை தபால்நிலையம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாநில தலைவர் நமச்சிவாயம் தலைமை தாங்கினார்.
முதல்- அமைச்சர் நாராயணசாமி, அகில இந்திய காங்கிரஸ் செயலாளரும், புதுவை பொறுப் பாளருமான சஞ்சய்தத் ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் முதல்- அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-
டெல்லியில் ராகுல்காந்தி சி.பி.ஐ. அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் நடத்தி கொண்டிருக்கிறார். ஊழலை ஒழிப்பேன் எனக்கூறி மோடி ஆட்சிக்கு வந்தார்.
ஆனால், பா.ஜனதா ஆளும் அனைத்து மாநிலங்களிலும் ஊழல் தலைவிரித்தாடுகிறது. ராஜஸ்தானில் நிலக்கரி ஊழல், மத்திய பிரதேசத்தில் டாக்டர் நியமனத்தில் ஊழல், சத்தீஸ்கரில் அரிசி வாங்கியதில் ஊழல் என பா.ஜனதா ஆளும் மாநிலங்களில் நடைபெறும் ஊழலை காங்கிரஸ் கட்சி ஆதாரத்தோடு எடுத்துக்கூறி வருகிறது.
தமிழகத்தில் முதல்- அமைச்சர் மீது சி.பி.ஐ. விசாரணை நடக்கிறது. அமைச்சர்களின் வீடுகளில் சோதனைகள் நடக்கிறது.
எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களை பா.ஜனதா முடக்குகிறது, கண் காணிக்கிறது. ஆனால் பா.ஜனதா ஆளும் மாநிலங்களில் நடைபெறும் ஊழலை கண்டும், காணாமலும் உள்ளது.
இதைத்தான் ராகுல்காந்தி பாராளுமன்றத்தில் கேட்டார். பல மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம் செய்தும் கேள்வி எழுப்பி வருகிறார். ஆனால், மோடி இவை எதற்கும் பதில் கூறவில்லை.
ஊழலை ஒழிப்பேன் என சொன்ன மோடி ஊழலுக்கு உறுதுணையாக உள்ளார். மோடிக்கு கடைசிகாலம் நெருங்கிவிட்டது. இன்னும் 5 மாதங்களில் மோடியின் ஆட்சி வீட்டிற்கு போகும். நாம் மோடியை வீட்டிற்கு அனுப்ப வேண்டும். ராகுல் காந்தியை பிரதமராக்க வேண்டும். அதற்கு உறக்க மின்றி நாம் பணியாற்ற வேண்டும்.
புதுவையின் பாராளு மன்ற வேட்பாளரை வெற்றி பெறச்செய்ய வேண்டும். ராகுல்காந்தியை பிரதமராக்க புதுவை எம்.பி. கை கொடுக்க வேண்டும். இதற்காக காங்கிரஸ் தொண்டர்கள் பாடுபட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
போராட்டத்தில் அமைச்சர் ஷாஜகான், துணை சபாநாயகர் சிவக் கொழுந்து, எம்.எல்.ஏ.க்கள் பாலன், விஜயவேணி, தனவேலு, டெல்லி பிரதிநிதி ஜான்குமார், காங்கிரஸ் துணைத்தலைவர்கள் விநாயகமூர்த்தி, நீல. கங்காதரன், பொதுச் செயலாளர்கள் ஏ.கே.டி.ஆறுமுகம், கருணாநிதி, தனுசு, ஐ.என்.டி.யூ.சி. மாநில தலைவர் ரவிச்சந்திரன்,
இளைஞர் காங்கிரஸ் தலைவர் ரமேஷ், பொதுச் செயலாளர் விக்னேஷ், மாணவர் காங்கிரஸ் தலைவர் கல்யாணசுந்தரம், துணைத்தலைவர் விக்கிர மாதித்தன், மகிளா காங்கிரஸ் தலைவி பிரேமலதா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மத்திய பா.ஜனதா அரசுக்கு எதிராகவும், மோடிக்கு எதிராகவும் கோஷம் எழுப்பினர். #pmmodi #narayanasamy #congress
புதுவை அரசு சார்பில் சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் நிறுவனங்கள், சமூக சேவை அமைப்புகளிடம் இருந்து நிதி வசூல் பெற்று பல்வேறு பணிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.
இதற்காக முதல்- அமைச்சர் தலைமையில் தனிக்குழு செயல்படுகிறது. ஆனால், இந்த திட்டத்தை கவர்னர் கிரண்பேடி தன்னிச்சையாக உருவாக்கி ரூ.85 லட்சம் வரை வசூல் செய்து இருக்கிறார்.
இது, விதிமுறைகள்படி தவறானது. இதில் முறைகேடு நடந்து இருக்கிறது என்று நாராயணசாமி குற்றம் சாட்டினார்.
இதற்கு கவர்னர் கிரண்பேடி பதில் அளித்து கூறியதாவது:-
சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் கவர்னர் மாளிகை எந்த நிதி வசூலும் செய்யவில்லை.
புதுவையில் உள்ள ஏரிகள், குளங்கள், கால்வாய்கள் குறைந்தபட்சம் 6 முதல் 15 ஆண்டுகளாக தூர் வாரப்படவில்லை. நிதி தட்டுப்பாடு காரணமாக பிரதான பாசன கால்வாய், கிளை கால்வாய்களை பொதுப்பணித்துறையால் தூர்வார முடியவில்லை.
இந்த நிலையில் “நீர்வளமிக்க புதுச்சேரி” என்ற இலக்குடன் நீர் நிலைகளை தூர் வாரும் பணியை கவர்னர் மாளிகை மேற்கொண்டு வருகிறது.
வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாக நீர்நிலைகளையும், பாசன கால்வாய்களையும் தூர்வார நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சமுதாய சிந்தனை மிக்கவர்கள், கொடையாளர்கள், தொழில் நிறுவனங்கள் உதவியுடன் இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த பணியை மேற்கொள்ள கவர்னர் மாளிகை ஊக்கியாக மட்டுமே செயல்படுகிறது. பணம் எதையும் கவர்னர் மாளிகை நேரடியாக பெறவில்லை.
பணபரிமாற்றமே நடைபெறாமல் இருக்கும் போது, இதில் ஊழல் நடக்கிறது என்கிற குற்றச்சாட்டை எப்படி ஏற்க முடியும்? குற்றச்சாட்டுகள் குற்றச்சாட்டுகளாக மட்டுமே இருந்து கொண்டு இருக்கும்.
கவர்னரின் ஆணையர் மற்றும் செயலராக இருந்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான தேவநீதிதாஸ், கவர்னர் மாளிகையில் பணியை தொடர வேண்டும் என்று நான் விரும்பினேன். இதனால் மத்திய உள்துறை, மாநில நிதித்துறை ஆகியவற்றின் ஒப்புதலுடன் கவர்னரின் ஆலோசகராக அதாவது கவர்னரின் சிறப்பு அதிகாரியாக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கான ஆணையை புதுவை அரசின் தலைமை செயலாளர் வெளியிட்டுள்ளார். இதன்படி தான் கவர்னரின் சிறப்பு அதிகாரியாக தேவநீதிதாஸ் தொடர்கிறார்.
யூனியன் பிரதேசங்களின் சட்டம் 1963, புதுச்சேரி சட்ட விதிகள் 1963 ஆகியவற்றின்படி பணிகளை நியமிப்பதில் கவர்னர் தான் அதிகாரம் பெற்றவர். எனவே, நீர்நிலைகளை தூர் வாரியது, சிறப்பு அதிகாரியை நியமித்ததில் எவ்வித அதிகார துஷ்பிரயோகமும், முறைகேடும் நடக்கவில்லை.
இவ்வாறு கிரண்பேடி கூறினார். #PondicherryGovernor #Kiranbedi #Narayanasamy
புதுச்சேரி:
புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
கார்ப்பரேட் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் அரசின் வளர்ச்சி திட்டங்களில் பங்கேற்கும் வகையில் சமூக பங்களிப்பு நிதி கமிட்டி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கமிட்டியின் தலைவராக முதல்-அமைச்சரும், செயலராக மாவட்ட கலெக்டரும் உள்ளனர்.
புதுவை முதல்-அமைச்சர் அலுவலகம், கலெக்டர் அலுவலகத்தில் இதற்காக நிதி தருவார்கள். காசோலை வழியாக பெறப் படும் இந்த நிதிக்கு உடனடியாக அத்தாட்சி ரசீது வழங்கப்படும்.
இந்த நிதியின் மூலம் கல்வித்துறையில் ஸ்மார்ட் வகுப்பறைகள், அரசு பள்ளிகளில் கழிவறைகள் கட்டப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு டெங்கு பரிசோதனை கருவி வாங்குவதற்காக ரூ.13½ லட்சம் நிதியை இந்தியன் வங்கி நிர்வாகத்தினர் அளித்துள்ளனர்.
கவர்னர் மாளிகையில் இருக்கும் ஊழியர்கள் போன் மூலம் சமூக பங்களிப்பு நிதி தரும்படி கட்டாயப்படுத்துவதாக எங்களுக்கு புகார்கள் வந்துள்ளது. பல தொழிற்சாலைகளிடம் இருந்து ரூ.85 லட்சம் நிதி கட்டாயமாக வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இந்த பங்களிப்பு நிதியை பெற்றதற்காக எந்த அத்தாட்சி ரசீதும் தரப்படவில்லை. இந்த நிதியை எதற்காக செலவு செய்யப்போகிறார்கள்? என்ற கணக்கு விபரமும் தெரியவில்லை. இந்த நிதியை வசூலிக்க கவர்னருக்கும், கவர்னர் மாளிகைக்கும் அதிகாரம் கிடையாது.
அப்படியிருக்க எந்த அடிப்படையில் எந்த விதியின் கீழ் இந்த நிதியை வசூலித்தனர்? இதற்கு கவர்னர் மாளிகையில் விளக்கம் தருவார்கள் என நம்புகிறோம். இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்திடம் புகார் செய்யவுள்ளேன்.
புதுவை கவர்னரின் செயலாளராக தேவநீதிதாஸ் பணியாற்றி வந்தார். இவர் பணி ஓய்வு பெற்றுவிட்டார். இவரை கவர்னர் சிறப்பு அதிகாரியாக நியமித்தார். இதற்காக உள்துறைக்கு கோப்பு அனுப்பினார்.
இந்த கோப்பிற்கு உள்துறை அனுமதி தரவில்லை. அனுமதி பெறாமலேயே தேவநீதி தாசை தொடர்ந்து சிறப்பு அதிகாரியாக நியமித்து கொண்டார்.
இதுதொடர்பாக கவர்னருக்கு கடிதம் எழுதினேன். ஆனால், இதுவரை எந்த பதிலையும் கவர்னர் அளிக்கவில்லை. சிறப்பு அதிகாரியாக நியமக்கப்பட்டுள்ள தேவநீதிதாஸ் செயலாளர் அறையையே பயன்படுத்திக்கொண்டு அதிகாரிகளுக்கு உத்தர விட்டு வருகிறார்.
சிறப்பு அதிகாரிக்கு கவர்னருக்கு ஆலோசனை கூறும் பொறுப்பு மட்டும் தான் உள்ளது. கவர்னர், அதிகாரிகளுடன் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்கவோ, அதிகாரிகளை நேரடியாக அழைத்து பேசவோ எந்த அதிகாரமும் கிடையாது.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது எம்.எல்.ஏ.க்கள் லட்சுமி நாராயணன், தீப்பாய்ந்தான், ஜெயமூர்த்தி, டெல்லி பிரதிநிதி ஜான்குமார் ஆகியோர் உடனிருந்தனர். #cmnarayanasamy #puducherrygovernor
புதுச்சேரி:
புதுவை அரசு மகளிர்- குழந்தைகள் மேம்பாட்டுத்துறை சார்பில் சர்வதேச பெண் குழந்தைகள் தின விழா ஜெயராம் திருமண நிலையத்தில் நடைபெற்றது. அதில், ஏராளமான பெண்கள், கல்லூரி மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.
அப்போது மாணவர்கள் கவர்னர், முதல்-அமைச்சர், அமைச்சருடன் கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
மாணவர்கள் கேள்வி கேட்டால் அதற்கு கவர்னர் பதில் அளிப்பார் என்று அதிகாரிகள் அறிவித்தனர்.
அப்போது தாகூர் கலைக்கல்லூரி மாணவர் தினேஷ் மேடைக்கு வந்தார். அவரிடம் மைக் கொடுக்கப்பட்டது. அவர் கேட்ட முதல் கேள்வியே மேடையில் சலசலப்பை ஏற்படுத்தும் விதமாக இருந்தது.
இந்த அரசு முறையாக செயல்படுகிறதா? என்று தனது முதல் கேள்வியை அவர் கேட்டார். கேள்வி சர்ச்சைக்குரிய அளவில் இருந்ததால் கவர்னரோ, முதல்-அமைச்சரோ யாரும் பதில் அளிக்க முன்வர வில்லை.
அப்போது சுதாரித்து கொண்ட அதிகாரிகள் இதுபோன்ற கேள்விகளை எல்லாம் கேட்க கூடாது. இது, பெண் குழந்தைகள் தொடர்பான விழா. எனவே, பெண்கள் சம்பந்தமான உரிமைகள், அதிகாரங்கள் பற்றி கேள்வி கேட்கலாம் என்று கூறினார்கள்.
உடனே அந்த மாணவர் பெண்களுக்கு இந்த அரசு என்ன திட்டங்களை செய்து இருக்கிறது? என்று கேட்டார்.
அதற்கு கவர்னர் பதில் அளிப்பதற்கு முன்பாக முதல்-அமைச்சர் நாராயணசாமி தலையிட்டு அரசு சம்பந்தமான கேள்வி என்பதால் நான் பதில் அளிக்கிறேன் என்று கூறி பதில் அளிக்க தொடங்கினார்.
புதுவையில் பெண்கள் சொத்து வாங்கினால் 50 சதவீதம் பதிவு கட்டணம் மானியம் வழங்கப்படுகிறது. பெண்கள் தொழில் தொடங்கினால் அவர்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகிறது என்று பல தகவல்களை கூறினார்.
இந்த கேள்விக்கு பதில் சொன்னதும் மேற்கொண்டு கேள்விகளுக்கு பதில் அளிக்காத வகையில் கவர்னர் அங்கிருந்து வெளியேறி விட்டார்.
அதைத்தொடர்ந்து முதல்- அமைச்சர், சபாநாயகர், அமைச்சரும் வெளியேறி விட்டனர்.
இதனால் விழாவுக்கு வந்திருந்த மாணவர்களிலும் பெரும்பாலானோர் அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டனர். அதன் பிறகு சில மாணவர்கள் கேள்வி கேட்க, அதற்கு அதிகாரிகள் பதில் அளித்தனர். #narayanasamy #puducherrygovernor
புதுவையில் கடந்த 3-ந்தேதி இரவு தொடங்கி 4 நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது.
பகல், இரவு என மழை தொடர்ந்த வண்ணம் உள்ளது. லேசான மழையை தொடர்ந்து அவ்வப்போது கனமழையும் பெய்த வண்ணம் உள்ளது.
இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்க தொடங்கி உள்ளது. நகரின் பிரதான சாலைகளில் மழை நீர் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
பாகூர், ஏம்பலம், கரிக்கலாம்பாக்கம் ஆகிய கிராமப்புற பகுதிகளில் விவசாய நிலங்களில் மழை நீர் தேங்கியுள்ளது. இதனால் 1,500 ஏக்கர் நெல் பயிர் மூழ்கி உள்ளது.
மழை நீரை வெளியேற்ற விவசாயிகள் வரப்புகளை வெட்டி திறந்து விட்டுள்ளனர். இருப்பினும் தொடரும் மழையால் நெல்பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளது. மழை நின்றால் மட்டுமே பயிர்கள் நீரில் மூழ்கி அழுகுவதை காப்பாற்ற முடியும் என விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
இதனிடையே மேலும் 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதையடுத்து அரசு துறைகள் அனைத்தும் முடுக்கி விடப்பட்டுள்ளது. கவர்னர் கிரண்பேடியும், முதல்-அமைச்சர் நாராயணசாமியும் தனித்தனியாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி பல்வேறு உத்தரவுகளையும் பிறப்பித்துள்ளனர்.
அதோடு இன்றைய தினம் (சனிக்கிழமை) புதுவையில் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த 21-ந் தேதி மொகரம் பண்டிகைக்கு அரசு சார்பில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த விடுமுறைக்கு மாற்றாக இன்று வேலை நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் கனமழை பெய்து வருவதாலும், மழைக்கு எச்சரிக்கை விடப்பட்டு இருப்பதாலும் அரசு விடுமுறையை முதல்- அமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.
இதனால் இன்று பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்கள் இயங்கவில்லை. இன்று அதிகாலை முதல் மழை பெய்த வண்ணம் உள்ளது. அவ்வப்போது கனமழையும் மற்ற நேரங்களில் லேசான மழையும் பெய்து வருகிறது.
இதற்கிடையே வானிலை மையம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுத்திருப்பதால் அரசு துறை ஊழியர்கள் அனைவரும் நாளை பணியில் இருக்க வேண்டும் என்று உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் மோசமான வானிலை காரணமாக புதுவையில் இருந்து தினந்தோறும் இயக்கப்படும் பெங்களூரு, ஐதராபாத் விமானங்கள் கடந்த 2 நாட்களாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
தொடர் மழை காரணமாக மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்